‘சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா அதிபர் புடின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆசாத் சிரியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுவரை அவரை பாதுகாத்து வந்த புடின் தலைமையிலான ரஷ்யா, அவரை பாதுகாக்கவில்லை. சிரியா மீதான ஆர்வத்தை ரஷ்யா விட்டுவிட்டது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த போர் துவங்கி இருக்கக்கூடாது. இத்தனை நாட்கள் நீடிக்கவும் கூடாது.
உக்ரைன் போர் மற்றும் மோசமான பொருளாதாரம் காரணமாக ரஷ்யா பலவீனமாக உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானும் பலவீனமாக உள்ளது.
உக்ரைனும் ராணுவ வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் என நான்கு லட்சம் பேரை இழந்துள்ளனர். அங்கு உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். தேவையில்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி உள்ளன. பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இது தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாக தான் அமையும்.
புடினை எனக்கு நன்கு தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. என்று அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.