தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஏஐடியுசி அலுவலகம் அமைந்துள்ள ப.மாணிக்கம் இல்லத்தில் மாநில இணைச்செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் நிர்மலா என்ற விமலா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஏஐடியுசி மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.சுரேஷ் மாநில நிர்வாககுழு முடிவுகள் குறித்து உரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி காத்திருப்பு போராட்ட தயாரிப்பு பணிகள் குறித்து உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் செங்கல்பட்டு ராஜேஷ் கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் புயல், வெள்ளம், டெங்கு, கொரோனா இப்படி எந்த பேரிடர் வந்தாலும் களத்தில் உயிரைப் பணயம் வைத்து அனைத்து பணிகளையும் செய்பவர்கள் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் கிராம சுகாதார ஊக்குநர்கள்.
பேரிடர் காலங்களில் தொற்று நோய்களை பொருட்படுத்தாமல் கடமையை செவ்வனே செய்து வரும் களத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் தலையாயக் கடமை. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் அரசு தருகிறேன் என்று சொல்லிய கொரனா கால பணிக்கான ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
கொரோனா ஊக்கத்தொகையை அரசு அறிவித்தபடி வழங்க வேண்டும் . குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்தபடி குறைந்தபட்ச ஊதியமும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியமும் வழங்க வேண்டும் பணித்தளங்களில் ஏற்படும் விபத்து மற்றும் மரணத்திற்கான நிவாரணமாக ESI, PF, FBF வழங்க வேண்டும்.
பணி பாதுகாப்பு, பணிக்கொடை ஓய்வூதியம் வாரிசு வேலை வழங்க வேண்டும் நிரந்தர காலிப் பணியிடங்களில் கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும், தற்காலிகமாக பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் பணியை முறைப்படுத்துதல் வேண்டும்
என்ற கோரிக்கைகளுக்காக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளை திரட்டி மாநாடு நடத்தப்பட்டது. மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசுக்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அரசோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு ஆணைகள் இருந்தும் நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை
எனவே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆணையர் அலுவலக வளாகம் முன்பு 2025 ஜனவரி 7ல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது.
இந்த போராட்டத்தை சிறப்பாக நடத்த தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 2024 டிசம்பர் 31 வரை பிரச்சாரம் செய்ய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கில் பங்கேற்பது.
மேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.