கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
சிரியாவில், 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற ஆசாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். கடந்த, 2011ம் ஆண்டு அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன.
இந்நிலையில், அல் – குவைதா அமைப்பின் ஒரு பகுதியான ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையில் அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின.
அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.
இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. தலைநகரை போராட்டக்காரர்கள் நெருங்கியதை அறிந்த அதிபர் ஆசாத், விமானம் மூலம் தப்பிச் சென்றார்.
ஆனால் எந்த நாட்டுக்கு ஆசாத் தப்பிச் சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் மர்மமாக இருந்தது.
தற்போது ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா, மாஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.