திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை 4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.
அதன்படி, தீபத் திருவிழாவின் 6 -வது நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகா், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலாவும், 63 நாயன்மாா்கள் வீதியுலாவும் நடைபெற்றது.
மாணவர்கள்
சிவபெருமானுக்கு தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர், கண்ணப்ப நாயனார், சிறுதொண்டு நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில், இந்த விழாவில், ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 63 நாயன்மார்களை சுமந்து கொண்டு மாடவீதியுலா வருவர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் மாணவர்கள் 63 நாயன்மார்கனை சுமந்து மாடவீதியுலா வந்தனர்.
வெள்ளித் தேரோட்டம்
இரவு 9 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். இத்துடன், வெள்ளி விமான வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்..
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.