Close
டிசம்பர் 12, 2024 12:40 மணி

மனுக்களை மாலையாக்கி வந்து மீண்டும் புகாரளித்த மனுதாரர்..! கலெக்டர் ஆபீசில் பரபரப்பு..!

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பழனிவேல் என்பவர் மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு, நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் :

கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதுவரை அளித்த கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு, மீண்டும் மனு கொடுக்க வந்த நபரால், நாமக்கல் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, என்.புதுப்பட்டி பஞ்சாயத்து, மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர், தங்கள் பகுதியில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த ஓராண்டாக கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுக்களின் நகல்களை, மாலையாக அணிந்துகொண்டு மீண்டும் மனு கொடுக்க கலெக்டர் ஆபீஸ் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.புதுப்பட்டி பஞ்சாயத்து, மேலப்பட்டி கிராமத்தின் முக்கிய பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமத்திற்கு செல்லும் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதில் பொதுவழிப்பாதை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 2023ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கலெக்டரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இதுவரை அளிக்கப்பட்ட மனுக்களின் நகல்களை ஒன்றாக இணைத்து மாலையாக கொண்டு வந்துள்ளேன் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top