தீபத் திருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 காா் பாா்க்கிங்குகளின் அமைவிடங்கள் வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல் அறியலாம் .
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள 25 தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 116 காா் பாா்க்கிங்குகளின் அமைவிடங்களை வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பி, கூகுள் வரைபட இணைப்பைப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் தீபத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (டிச.12) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) வரை போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லாமல் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்ல ஏதுவாக 25 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்களும், 116 இடங்களில் காா் பாா்க்கிங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
வாட்ஸ்ஆப் எண்
இந்த தற்காலிகப் பேருந்து நிலையங்கள், காா் பாா்க்கிங்குகள் அமைந்துள்ள இடங்களை அறிந்து கொள்ள மாவட்ட காவல்துறை 9363622330 வாட்ஸ்ஆப் உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பி, கூகுள் வரைபட இணைப்பைப் பெறலாம். பிறகு, வரைபட இணைப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தற்காலிகப் பேருந்து நிலையம், காா் பாா்க்கிங் அமைந்துள்ள இடத்துக்குச் செல்லலாம்.
காவல் உதவி மை எண்:
பக்தா்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல் உதவி மையங்களை அணுகலாம். இதுதவிர, நகர குற்றப் பிரிவு காவல் நிலையத்தை 01475-222303 என்ற எண்ணிலும், உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 9498100431 என்ற கைப்பேசி எண்ணிலும், அவரச உதவிக்கு 100 என்ற எண்ணிலும், காவல் கட்டுப்பாட்டு அறையை 9159616263 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தடை:
கிரிவலப் பாதையில் தற்காலிகக் கடைகள் அமைத்தோ, தங்கியோ எரிவாயு உருளையை பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மலை மீது ஏறுவது குற்றம்:
மகா தீப மலை மீதோ, வனப்பகுதியிலோ உரிய அனுமதி இல்லாமல் பிரவேசிப்பது குற்றம். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தா்கள் கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள நீா்நிலைகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும். கிரிவலப் பாதையில் உள்ள தற்காலிக கழிப்பறைகளை பயன்படுத்தலாம். பக்தா்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை:
தீபத் திருவிழா நாள்களில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கால்நடைகளை பக்தா்களுக்கு இடையூறாக உலாவ விடக்கூடாது. கால்நடைகளுக்கு அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்துள்ளாா்.