தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலை தீபமாலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது. இதனைத் தொடர்ந்து 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த புயல் மழையால் தீப மலையில் பாறைகள் விழுந்து ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். தீப மலையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மலைப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று மலைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் வனத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், தீபத் திருநாள் அன்று மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்தது. மலை ஏற உகந்த சூழல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிவிக்கப்படும் என அரசும் தெரிவித்திருந்தது.
இதற்காக புவியியல் வல்லுநனர் குழுவினர் ஆய்வை நடத்தி அறிக்கையை சமர்பிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இன்று இந்த ஆய்வு முடிவுகள் குறித்தும், அனுமதி குறித்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில்;
பக்தர்கள் மலையேற தடை
அண்ணாமலையார் மலையின் மேற்பகுதியும், பாதையும், மலையும் அதிக ஈரப்பதத்துடன் இருக்கிறது. எனவே மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது. வழக்கமாக தீபம் ஏற்றுபவர்கள், கொப்பரை எடுத்துச் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மலை மீது தீபம் ஏற்ற இரு பாதைகள் உள்ளன. அதில் ஒரு பாதை மலை மீது ஏறிச் செல்ல உகந்ததாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே அந்தப் பாதையில் இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கீழே தீயணைப்புத்துறை, காவல்துறை, மருத்துவர்கள் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருப்பர். தடையை மீறி பக்தர்கள் யாரும் மலை மீது ஏற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. தடையை மீறி யாரும் மலை மீது செல்லாமல் இருப்பதற்கு வனத்துறையினரும், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருக்கிறது. இதனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட உள் தமிழக மாவட்டங்களிலம் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.