Close
டிசம்பர் 12, 2024 7:51 காலை

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம், சிறப்புக்கள் தெரியுமா?

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான்.  இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 14 ஆம் தேதி மாலை 04.58  மணிக்கு துவங்கி மறுநாள் 15 ஆம் தேதி பகல் 02.31  மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 13,14,15 ஆகிய 3 நாட்களுமே கிரிவலம்  செல்ல ஏற்ற நாட்களாக குறிப்பிடப்படுகின்றன.

வழக்கமாக கார்த்திகை பெளர்ணமி, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து தான் வரும். இந்த நாளையே நாம்  கார்த்திகை தீபத்திருநாளாக  கொண்டாடுவோம். ஆனால் கால சுழற்சி காரணமாக பல ஆண்டுகளுக்கு ஒருமுறை கார்த்திகை மாத பெளர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் வேறு வேறு நாட்களில் வருவதுண்டு. அப்படி வரும் போது கார்த்திகை நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட வேண்டும் என்ற முறை உள்ளது. அதனால் இந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், டிசம்பர் 14, 15ம் தேதி கார்த்திகை பெளர்ணமியும் வருகின்றன.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி விசேஷம்

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமிக்கு ஒரு விசேஷம் உள்ளது. பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்ற நாள் தான் கார்த்திகை பௌர்ணமி ஆகும்.

கார்த்திகை தீபத் திருவிழா பத்தாவது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டு உற்சவம் முடிந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் கிரிவலம் வருவார். ஈசன் மற்றும் அம்பாளுடன் கிரிவலம் வருவது கார்த்திகை பௌர்ணமியில் தான். மேலும் அன்று சந்திரன் சூரியனிடமிருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று அதை வெளியிடும் பூரண நிலவாக உலா வருகிறார். அந்த ஒளி மலை மீது பட்டு பிரதிபலிக்கும் போது அது நமது உடலுக்கு நம் மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத் தெரியாமலே செய்கின்றது .இதனால் பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பாக போற்றப்படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமை அன்று திருக்கார்த்திகையும் பிரதோஷமும் சேர்ந்து வரும் ஒரு சிறப்பான நாளாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top