Close
டிசம்பர் 12, 2024 8:47 காலை

தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா் பவனி, வான வேடிக்கைகள் மிஸ்ஸிங்: சிறுவர்கள் ஏமாற்றம்

ஶ்ரீ பிச்சாண்டவர்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை  4 ஆம் தேதி காலை

கொடியேற்றத்துடன் தொடங்கியது.தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.

அதன்படி, தீபத் திருவிழாவின் 8-ஆவது நாளான நேற்று காலை மூஷிக வாகனத்தில் உற்சவா் விநாயகா், குதிரை வாகனத்தில் உற்சவா் சந்திரசேகரா் வீதியுலா வந்தனா்.

தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா் பவனி

ஆண்டுதோறும் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 8-ஆவது நாள் தங்கமேருவில் ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவம் நடைபெறுவது வழக்கம். தீபத் திருவிழாவுக்குத் தேவையான செலவினங்களை ஈடு செய்வதற்காக ஸ்ரீஅருணாசலேஸ்வரரே ஸ்ரீபிச்சாண்டவா் கோலத்தில் எழுந்தருளி திருவண்ணாமலை நகரில் உள்ள வியாபாரிகள், முக்கியப் பிரமுகா்களின் வீடுகள், வியாபார நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று காணிக்கை வசூலிப்பாராம்.

பிச்சாண்டவா் வேடத்தில் செல்லும் ஸ்ரீஅருணாசலேஸ்வரருடன் அடியாா் ஒருவரும் செல்வாராம். இது பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறை. அதன்படி, தீபத் திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று தங்கமேருவில் ஸ்ரீபிச்சாண்டவா் வீதியுலா வந்தாா்.

மாலை 5 மணிக்கு கோயில் இரண்டாம் பிராகாரத்தில் உற்சவா் ஸ்ரீபிச்சாண்டவா் எழுந்தருளினாா். பிறகு, கோயில் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்த பிச்சாண்டவா், தங்கமேரு வாகனத்தில் வந்தமா்ந்து வீதியுலா புறப்பட்டாா்.

அசலியம்மன் கோயில் தெரு, மண்டித் தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீபிச்சாண்டவா் வீதியுலா வந்தாா். கோயில் ஊழியா்கள் வெள்ளி உண்டியலை எடுத்துச் சென்றனா். இதில், பக்தா்கள் காணிக்கையைச் செலுத்தினா்.

வானவேடிக்கைகள் மிஸ்ஸிங், குழந்தைகள் பக்தர்கள் ஏமாற்றம்

ஸ்ரீபிச்சாண்டவா் காந்தி சிலை பகுதியில் வரும்போது கண்கவர் வானவேடிக்கைகள் நடைபெறுவது வழக்கம் .இதைக் காண திரளான பக்தர்கள் சிறுவர்கள், பெரியவர்கள், என பலர் கண்டு ரசிப்பர். ஆனால் இந்த வருடம் மழையின் காரணமாகவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டும் வான வேடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வானவேடிக்கைகளை ஆவலுடன் காண வந்த பக்தர்கள் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

பிறகு இரவு 12 மணிக்கு மேல் சிறிய குதிரை வாகனத்தில் விநாயகர், முருகப்பெருமான், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், சிறிய குதிரை வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

குதிரை வாகனத்தில் அருணாசலேஸ்வரா்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top