நாமக்கல்:
தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறந்த நூலகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வீடு தோறும் நூலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டந்தோறும் தமிழக அரசு புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. வீடுகளில் நூலகங்களை அமைத்துள்ள வாசகர்களைக் கண்டறித்து விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில், சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்வு செய்து, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவின் போது, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அதனால், புத்தக ஆர்வலர்கள், வீடுகளில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர், தங்களது நூலகம், பராமரிக்கப்பட்டு வரும் புத்தங்களின் எண்ணிக்கை, அரிய வகை புத்கங்கள், எத்தனை ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட விபரங்களுடன், நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள, மாவட்ட நூலக அலுவலருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விருதுக்கு dlonkoffice@gmail.com என்ற வெப்சைட்டில் ஆன்லைனில் அல்லது நேரில் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட நூலக அலுவலகத்தை, 98940 74616 என்ற செல்போன் நம்பரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.