Close
டிசம்பர் 12, 2024 6:28 மணி

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

டில்லியில், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பொம்மானியை, நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சரிடம், கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், டில்லியில், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசனியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், பல முக்கிய இடங்களில் மொபைல் போன் நெட்வொர்க் பிரச்சனை உள்ளது. இதனால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

நாமக்கல் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மருத்துக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி வளாகம், மோகனூர் தாலுகா சங்கராம்பாளையம் கிராமம், ராசிபுரத்தில் விரைவில் புதிய பஸ் ஸ்டாண்ட் துவக்கப்பட உள்ள அணைப்பாளையம் பகுதி, பள்ளிபாளையம் அருகில் உள்ள வெப்படை, ப.வேலூர் தாலுகா சுங்கக்காரம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மொபைல் போன் வெட்வொர்க் சரிவர கிடைப்பதில்லை. இதனால் ஆன்லைன் கல்வி, அவசர சேவைகள் மற்றும் டிஜிட்டில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுகிறது.

தகவல் தொடர்புகளை சரிவர அனுப்பவோ பெறவோ முடியாமல், பொதுமக்கள், மாணவர்கள், டாக்டர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் உள்கட்டமைப்பை மதிப்பிடவும், மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட டெலிகாம் ஆபரேட்டர்களை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மூலம் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், மாவட்டம் முழுவதும் விரைவில் முழுமையான அதிவேக மொபைல் நெட்வொர்க் சேவை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top