Close
ஏப்ரல் 4, 2025 11:48 காலை

பைடன் மனைவியுடனான புகைப்படம்: டிரம்ப்பின் வணிக தந்திரம்

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங்கள், வர்த்தக அட்டைகள், தான் கையெழுத்திட்ட கிதார் இசைக்கருவி உள்ளிட்டவை இவற்றில் பிரபலமானவை. தேர்தல் வெற்றிக்கு பின், ‘ஷூ’க்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை அவர் தன் சமூக வலைதள பக்கம் வாயிலாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நார்டே – டேம் – கதீட்ரல் தேவாலயம் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில், டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில், மகள் ஆஷ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை ‘உங்கள் எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத நறுமணம்’ என்ற வரியுடன் தன் வாசனை திரவியத்துக்கான விளம்பர படமாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

டிரம்பின் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியானநிலையில், பெரும்பாலானோர் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது, ஜோ பைடனை தரக்குறைவாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் மனைவியை தன் சுய விளம்பரத்துக்காக டிரம்ப் பயன்படுத்தியுள்ளது காட்டுமிராண்டித்தனமானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், எதிரிகளும் தன் வாசனை திரவியத்தை விரும்புவர் என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுள்ள இணையதளவாசிகள், டிரம்பின் நகைச்சுவை உணர்வை பாராட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top