நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வருகிற 16ம் தேதி கோமாரிநோய் தடுப்பூசிப்பணி துவங்க உள்ளது. மொத்தம் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு 6-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப்பணி, வருகிற 16 ம் தேதி துவங்கி 21 நாட்கள் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,98,400 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று, கோமாரி நோய் தடுப்பூசிபோட்டுக் கொள்ளவேண்டும். அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரம் அறிவிக்கப்படும்.
இத்தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களைக் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகியவற்றை அழைத்துச்சென்று, டிச. 16 முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.