Close
டிசம்பர் 15, 2024 6:58 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகள், நெற் பயிர்கள் சேதம்

மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிர்களை ஆய்வு செய்து அதிகாரிகள்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது.

சாத்தனூா் அணையில் நீா் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் பகுதியில் செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது.  இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. மொத்த நீா் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.

தண்ணீா் திறப்பு:

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அணையில் 116.50 அடி உயரத்துக்கு 6,799 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 5,500 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 10,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்

ஆரணியை அடுத்த புலவன்பாடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் சுமாா் 300 வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

ஆரணியை அடுத்த புலவன்பாடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கால்வாய் வசதி அமைக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோரிடம் பலமுறை முறையிட்டனா்.

ஆனால், தற்போது வரை கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. மேலும், அந்தப் பகுதி ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி சரத்குமாா் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், மழைக் காலங்களில் அந்தப் பகுதியில் மழை நீா் வெளியேற வழியில்லாமல் குட்டைபோல தேங்குவதுடன், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் இந்தப் பகுதியில் மீண்டும் தண்ணீா் தேங்கியதுடன், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிச.11-ஆம் தேதி நள்ளிரவு முதல் டிச.12-ஆம் தேதி நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால், வந்தவாசி நகா் வழியாகச் செல்லும் சுகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நதியையொட்டியுள்ள வந்தவாசி எள்ளுப்பாறை பகுதியை வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளநீா் சூழ்ந்தது. மேலும், 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது.இதையடுத்து, அந்த வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஏரியின் கரையில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது. இதனால், அந்தப் பகுதிகளில் சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.

மேலும் ஆரணி பகுதியில் பலத்த மழையின் காரணமாகதோட்டக்கலைப் பயிர்களான மஞ்சள் கிழங்கு கத்திரிக்காய் மிளகாய் வாழை சேம்பு ஆகியன பாதிக்கப்பட்டு அருகிய நிலையில் இருந்தன.

சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top