Close
ஜனவரி 5, 2025 10:34 மணி

திருவண்ணாமலை தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம்அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க சிவகொடியை சிவாச்சாரியார்கள் இறக்கினர்.  அதனைத் தொடர்ந்து தங்க ரிஷபத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, முதல் நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ள அய்யங்குளத்தை சுற்றிலும், மின்னொளி மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும், குளத்தை சுற்றிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்களும், மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கிரிவலம்

விழாவின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்ல உள்ளனர். மலைமீது மகாதீபம் ஏற்றிய பிறகு, இறைவன் கிரிவலம் செல்வது தனிச்சிறப்பு. அப்போது, பராசக்தி அம்மனும் உடன் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

மேலும், தீபத்திருவிழா 2ம் நாள் தெப்பல் உற்சவமான இன்று இரவு, அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பலில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, நாளை இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top