Close
டிசம்பர் 18, 2024 2:01 மணி

கிரிவலம் வந்த அண்ணாமலையார்

கிரிவலம் வந்த அண்ணாமலையார்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார்.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கடந்த 4ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 13ம் தேதி அதிகாலை கோவிலினுள் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர்.

விழாவின் தொடர்ச்சியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் வருடத்திற்கு இரண்டுமுறை அண்ணாமலையை கிரிவலம் செய்வது வழக்கம். ஒன்று தீபோற்சவத்தின்போது மற்றொன்று திருவூடல் உற்சவத்தன்று (மாட்டுப் பொங்கலன்று).

இன்று அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது. அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர்

மேலும் அடி அண்ணாமலையிலிருந்து உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் வந்தார்.

அண்ணாமலையாரை எதிர்நோக்கி அன்பர்கள் சாலை நெடுகிலும் திரண்டிருந்தனர் .

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம் சார்பில் சுவாமி மற்றும் அம்மனுக்கு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

மேலும் அஷ்ட லிங்கங்கள், ரமண மகரிஷி ஆசிரமம் ,கிரிவலம் பாதையில் உள்ள கோயில்களில் சார்பாக அனைத்து இடங்களிலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாத்தி வழிபாடு செய்தனர்.

தெப்ப உற்சவம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம்  இரவு தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம்  இரவு  அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெற்றது, இன்று சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கிரிவலப் பாதையில் சாமானிய பக்தனுக்கு ஓடோடி வந்து அருள் பாலித்த அண்ணாமலையார் (பைல் படம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top