திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், வி.நம்மியந்தல் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி திறந்து வைத்தாா்.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், இராந்தம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.45 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டப்பட்டது. இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த வி.நம்மியந்தல் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இவ்விரு கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு இராந்தம் ஊராட்சித் தலைவா் வேடியப்பன் தலைமை வகித்தாா். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமயந்தி ஏழுமலை, திமுக ஒன்றியச் செயலா்கள் அண்ணாமலை, ராமஜெயம், வள்ளிவாகை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ரமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா் சீனிவாசன் வரவேற்றாா்.
தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசியதாவது,
கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகிலேயே பொது மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தமிழகம் தான். தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினாகியோர் இணைந்து தமிழ்நாட்டில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என துணை சபாநாயகர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகாதேவன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேலு, சடையனோடை ஊராட்சித் தலைவா் பிரபாகரன், வி.நம்மியந்தல் திமுக கிளைச் செயலா்கள் காளிதாசன், காமராஜ், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.