Close
ஏப்ரல் 6, 2025 11:52 மணி

மார்கழி முதல் நாளையொட்டி, திருவெம்பாவை பாடி வீதி உலா வந்த மாணவர்கள்

காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை தியாகம் செய்து வீதிதோறும் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடி வலம் வந்து கச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

இந்த பழக்கம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

மார்கழி மாதத்தில் அதிகாலை 5 மணிக்குத் துவங்கும் இந்த மாணவ, மாணவியர்களின் பக்தி பாசுரத்துடன் கூடிய இப்பயணம் அவர்கள் வசிக்கும் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாகச் செல்கின்றது. பக்திமணத்துடன் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் இந்த இளம் அடியார்கள் காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் வரை சென்று மீண்டும் அதே வழியில் பக்தி பாசுரங்கள் பாடியபடி தங்கள் இல்லங்கள் திரும்புகின்றனர்.

இந்த பக்திப் பயணத்தில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் கால் பாதங்களில் செருப்பு அணியாமல் மேல் சட்டையினை துறந்து நெற்றியில் திருமண் பூசி நெஞ்சினில் சந்தனம் மணக்க இடையில் நான்கு முழ வேட்டி மட்டுமே அணிந்து இந்த புனித வீதியுலாவில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசுரப் பயணம் தங்களுக்கு பக்தியை வளர்க்க மட்டுமல்ல அதிகாலை சுத்தமான குளிர்ந்த காற்றை சுவாசிப்பதனால் நோயற்ற நல்ல ஆரோக்கியமும், ஞாபக சக்தி கூடி தங்களது படிப்பில் நல்ல கவனிக்கும் தன்மை கூடி அதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய உதவுவதாக பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

இதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களில் அதிகாலை மார்கழி மாத பூஜைகள் தொடங்கியது. பல்வேறு வீதிகளிலும் பஜனை பாடல்களுடன் சிறுவர்கள், பெரியவர்கள் என வலம் வந்து திருப்பாவை திருவெம்பாவை பாடியபடியே வீதி உலா வந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top