Close
டிசம்பர் 18, 2024 12:54 மணி

நாமக்கல் நரசிம்மர் கோயிலில் திடீரென குவிந்த ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள்: சோஷியல் மீடியா தகவலால் பரபரப்பு

நாமக்கல் நரசிம்மர் கோயிலில், நேற்று காலை ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள், திடீரென வருகை தந்து, தியானத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் நேற்று காலை திடீரென குவிந்து, சிறப்பு வழிபாடு நடத்தி, தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே கல்லினால் உருவான, நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில் நரசிம்மசுவாமி கோயில் மலையைக்குடைந்து குடவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்குள்ள நாமகிரித்தாயார் கோயில் மிகவும் சிறப்பு வாய்நததாகும். புராண சிறப்பு பெற்ற இந்த கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. மார்கழி முதல் நாளான நேற்று நரசிம்மர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென வந்து குவிந்தனர். அவர்கள் கோயிலுக்குள் வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கோயில் வளாகத்தில் தரையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு, கோட்டை ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கோயிலுக்கு வந்த வெளிமாநில பக்தர்கள் கூறியதாவது: வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் உள்ள சோஷியல் மீடியாக்களில், பிரபல ஆன்மீக ஜோதிடர் ஒருவர் மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் டிச.,16ம் தேதி சஞ்சாரம் செய்கின்றனர். அன்றைய தினத்தில், நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உள்ள லஷ்மி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்து, சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கும் என தெரிவித்திருந்தார். எனவே நாங்கள் நாமக்கல் புறப்பட்டு வந்து, நரசிம்மர் கோயிலில் வழிபாடு மற்றும் தியானத்தில் ஈடுபட்டோம் என கூறினர்.

இதுகுறித்து கோயில் பட்டாச்சாரியர்கள் கூறியதாவது: மார்கழி மாதம் 1ம் தேதி சூரியன் தனது ராசி பயணத்தை தனுசு ராசிக்கு செலுத்தக்கூடிய நாளாகும். சில ஜோதிடர்கள் யூடியூபில், மார்கழி 1ம் தேதி காலை 6.15 மணிமுதல் காலை 7.15 வரை நாமகிரித் தாயாரை வழிபட்டால் வேண்டிய பலன் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

மேலும், இதுபோன்ற நிகழ்வு இனி 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் நடை பெறும் எனவும் கூறியுள்ளனர். இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், திடீரென கோயிலுக்கு வந்து, சுவாமி வழிபாடு செய்து தியானத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றது என்று கூறினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top