தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சத்துணவுப் பணியாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பு கலைமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.
சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை மாதம் ரூ.3,000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நியமனம் செய்யப்படும் பணியாளர்களிள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய (STS) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்படும்.
அமைப்பாளருக்கு 7700 ரூபாய் முதல் 24,200 வரை
சமையலருக்கு 4100 ரூபாய் முதல் 12500 வரை
சமையல் உதவியாளர் 3000 ரூபாய் முதல் 6000 வரை
தொகுப்பூதிய சமையல் உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.27 கோடி செலவு ஏற்படும். இந்த பணியிடங்களை நிரப்புவது குறித்து முறையான வழிகாட்டுதல்களை விரைவில் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கும். அதன்படி பணியிடங்கள் நிரப்பப்படும்.