Close
டிசம்பர் 23, 2024 3:49 காலை

மோகனூரில் பல அறிஞர்களை உருவாக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பள்ளிக்கு மூடு விழா : அதிர்ச்சி..!

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்புறத் தோற்றம் (பைல் படம்).

நாமக்கல் :

மோகனூரில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் போன்ற அறிஞர்களை உருவாக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் மூடு விழா நடைபெறுகிறது. இதனால் பெற்றோர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 1978 ல் துவங்கப்பட்டது. சர்க்கரை ஆலை வளாகத்தில், ஆலையின் நிர்வாகத்தின் கீழ் இந்தப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

கரும்பு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் ஆலை பணியாளர்களின் குழந்தைகள் குறைந்த செலவில், ஆங்கில வழி கல்வி பயில வேண்டும் என்பதற்காக இப்பள்ளி பல பெரியோர்களின் முயற்சியால் துவங்கப்பட்டது.

எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை செயல்பட்டு வந்த இப்பள்ளியில், நாமக்கல் மாவட்டம் தவிர்த்து, வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் சேர்ந்து படித்து வந்தனர். இங்கு படித்த பலர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களாக உயர் பதவியில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளி பல ஆண்டுகள் அரசு பொதுத்தேர்வுகளில் 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த நிலையில் இப்பள்ளி நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு, பரிட்சார்த்த அடிப்படையில், கோவை தயானந்தா சரஸ்வதி சுவாமிகளின் ‘எய்ம் ஃபார் சேவா’ அறக்கட்டளை எடுத்து நடத்தியது.

3 ஆண்களுக்குப் பின், மீண்டும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போது, எல்.கே.ஜி., முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

அதில், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என, 25க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த, 19ம் தேதி, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர்களை அழைத்த ஆலை நிர்வாகம், அரசு உத்தரவுப்படி, சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால், உங்கள் குழந்தைகளை, வருகின்ற ஜனவரி மாதம் முதல், வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பல பள்ளிகளில் கல்வி ஆண்டின் இடையில் சேர்க்கை தரமாட்டார்கள். எனவே திடீரென பள்ளியை மூடினால், எங்கள் குழந்தைகளை எங்கு சேர்ப்பது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதற்கிடையில், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகாவை நேரில் சந்தித்து, இது குறித்து முறையிட்டனர்.

அதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் பள்ளி செயல்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டில், குழந்தைகளை மாற்றுப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து, மோகனூர் கூட்டுறவ சர்க்கரை ஆலை மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் சிலர் கூறும்போது, கடந்த, 46 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த ஆங்கில வழி பள்ளி, திடீரென மூடப்படுகிறது.

அதனால், நாங்கள் அதிக கட்டணத்தில் தனியார் பள்ளிகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பள்ளியை மூடுவதற்கு சரியான கராணம் எதுவும் இல்லாமல், நிர்வாக குளறுபடி காரணமாகவே பள்ளி மூடப்படுகிறது, என்றனர்.

இது குறித்து, சர்க்கரை ஆலை தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன் கூறும்போது,

தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளில் நிர்வாகத்தில் உள்ள 6 சர்க்கரை ஆலை பள்ளிகளையும், 2025ம் ஆண்டு, மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளி, நடப்பு கல்வி ஆண்டுக்குப் பின் தொடர்ந்து நடக்காது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top