Close
டிசம்பர் 27, 2024 12:21 காலை

தென்காசி பெத்தநாடார்பட்டியில் கேரள குப்பையா..? நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!

பெத்தநாடார் பற்றி அருகே மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை படத்தில் காணலாம்

நெல்லையை போன்று தென்காசியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்திலிருந்து தெற்கே செல்லதாயார்புரம் செல்லும் சாலை ஓரத்தில் விவசாய தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. விவசாய தோட்டக்களுக்கு செல்லும் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

பெத்தநாடார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கழிவுகள் மிகவும் குறைந்த அளவே சேகரிக்கப்பட்டு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கொட்டி வரும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரங்களில் வெளிப்பகுதிகளில் இருந்து கனரக லாரிகளில் மூடப்பட்ட நிலையில் பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளை டன் கணக்கில் வந்து கொட்டி செல்வதாகவும் குப்பை கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகளை அவ்வப்பொழுது தீயிட்டு எரிக்கும் பொழுது விவசாய நிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பகுதியில் டன் கணக்கில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.

தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top