நாமக்கல் :
நாமக்கல் உழவர் சந்தையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூட உழவர் நல ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நாமக்கல் மற்றும் எருமப்பட்டி வட்டாரத்திலிருந்து, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 2 உழவர் நல ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமத்தில் விளையும் விளைபொருட்களை, விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள், குளிர்பதனக் கிடங்கு, பரிவர்த்தனைக் கூடம் மற்றும் உலர்களங்கள் ஆகிய வசதிகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம், பண்ணை வாயில் வர்த்தகம், பொருளீட்டுக்கடன் வசதி, உழவர் நலத்திட்டம், உழவர் சந்தைகள், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம்,
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஏற்றுமதி ஆலோசனை மையம் ஆகிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேளாண்மை அலுவலர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், உதவி வேளாண்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.