Close
டிசம்பர் 26, 2024 2:50 மணி

மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கம்

மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி

மகா தீப கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனர்.

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 7-வது நாளான 10ஆம் தேதி அன்று மகா தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 13 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

பா்வதராஜகுல வம்சத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் பெரியோா்கள் தினமும் மகா தீபம் எரிவதற்குத் தேவையான நெய், திரி (காடா துணி) ஆகியவற்றை மலை மீது எடுத்துச் சென்று தீபக் கொப்பரையில் தீபம் ஏற்றி வந்தனா். தொடர்ந்து 11 வது நாளாக நேற்று மகா தீபம் காட்சியளித்தது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை, பலத்த காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் மகாதீபம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி மலை உச்சியிலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தீபக் கொப்பரையை எடுத்து வரும் வழியிலும் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் கொப்பரையை வழிபட்டனர்.

சிறப்பு பூஜை: இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மலை உச்சியில் இருந்த மகா தீபக் கொப்பரையை சம்மந்தம் தலைமையிலான தீப நாட்டாா் சமுதாயத்தினா் கோயிலுக்கு கொண்டு வந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் தீபக் கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top