திருவண்ணாமலையில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை, வ.உ.சி. நகா், 11-வது தெருவில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த வீடுகளில் வசித்த பொதுமக்களுக்கு தற்காலிகமாக இடம் தோ்வு செய்யப்பட்டு குடியமா்த்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் திருவண்ணாமலை, சமுத்திரம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:
திருவண்ணாமலையில் கடந்த மாதம் பெய்த கன மழையால் எதிர்பாராமல் மழையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு ஒரு வீட்டின் மீது மோதி அதில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அங்குள்ள குடும்பத்தினர் பயத்தினால் அந்தப் பகுதியில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தனர். எனவே தற்காலிகமாக அவர்களை தங்க வைக்கலாம் என திட்டமிட்டு தற்போது வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நிரந்தரமாக கிரிவலப் பாதையில் உள்ள சமுத்திரம் கிராமத்தில் 20 தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகள் முடிந்ததும் பொங்கல் திருநாளில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள்.
மேலும், திருவண்ணாமலை மலைப் பகுதியில் வீடுகள் இருக்கக் கூடாது. பக்தா்கள் மலையை மையப் பகுதியாக வைத்துதான் 14 கி.மீட்டா் தொலைவு கிரிவலம் செல்கின்றனா் என்ற அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் ஒரு நீதிபதியை நியமனம் செய்து 3 முறை இங்கு ஆய்வு செய்துள்ளனா். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் மலைப் பகுதியில் பட்டா இல்லாமல் வீடு கட்டுபவா்கள், பட்டா வைத்திருந்தும் வெளியில் வசிப்பதற்கு நேரிடையாக ஒப்புதல் அளிப்பவரின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறது. இங்குள்ள சூழ்நிலை குறித்து முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் அறிக்கை சமா்பிக்க உள்ளாா். இதன்பிறகு நாங்கள் முதல்வரிடம் ஆலோசிக்க உள்ளோம் என்றாா்.
இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த எடப்பாளையம் ஏரியில் பூங்கா அமைக்கும் பணி, பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, ஏரியில் மதகு அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பினா்கள் அண்ணாதுரை (திருவண்ணாமலை), தரணிவேந்தன் (ஆரணி), திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி , மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன், பிரியா வியஜரங்கன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.