Close
டிசம்பர் 27, 2024 9:25 மணி

ஆழிப்பேரலை சுனாமி நினைவு தினம்: இங்கிலாந்திலிருந்து சங்கர்

டிசம்பர் 26, 2004.
ஆழிப்பேரலை பதித்த வடு,
மனிதனை கொன்று புதைத்த அலைகள்,
புதைந்த நம் மனிதத்தை
தோண்டி எடுத்த நாள்.

20 வருடங்களாகியும்
நம் மனதில் ரணமாய்
இன்னும்.
மனித மனங்களில்
மாறாத வடுக்களை
பதிய விட்டு சென்றிருப்பதை
இந்த துயர் மிகு நாளில்
நினைத்து வருந்தாமல்
இருக்க இயலவில்லை..,

கொலை வலை விரித்த அலைகள்.,
துறைமுகங்களின் முகங்களை உடைத்த அலைகள்.,
கட்டுமரங்களை
கட்டைகளாக்கிய அலைகள்.,
மனற்பரப்புகளை மயானக்கரைகளாக்கிய அலைகள்.

ஒட்டுமொத்த கிராமங்களை
ஒரேயடியாய் கூட்டி சென்ற சமுத்திரம்..

கோப அலைகளை
கொடூர அலைகளை
கொட்டித்தீர்த்த சமுத்திரம் ..,

வயது வித்தியாசமின்றி
வாரிறைத்த சமுத்திரம்

அந்த நாளில்
மடிந்தவர்களின்
அடையாளம் காட்ட உறவில்லை
அஸ்தியை கரைக்க ஆளில்லை

நித்திரை களைவதற்குள்
நிரந்தரமாய்
கண் மூடிய சோகங்கள்
மண் மூடிய தேகங்கள்
அனாதைகளான உறவுகள்
அழுகிப்போன சடலங்கள்…

சமுத்திரமே.,
அன்றைய நாளில்
எங்களின் மரண ஓலங்கள்
உன் அலை ஓலங்களை
ஒரு படி குறைத்திருக்கும்,

எங்களின் அந்த கண்ணீரால்
உன் உப்பு தன்மை
ஒரு படி உயர்ந்திருக்கும்..,

இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top