Close
ஜனவரி 7, 2025 4:32 மணி

நாமக்கல்லில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆலோசனை மையம் துவக்கம்..!

கோப்பு படம்

நாமக்கல்:

வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவிடும் வகையில், நாமக்கல்லில் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, வேளாண்மை – உழவர் நலத்துறையின் மூலம் வேளாண் விளைபொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள், அவற்றின் தரம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் போன்ற பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளவும்,

வேளாண்மை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியையும், ஏற்றுமதியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படுகிறது.

இதையொட்டி, நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த விளைபொருட்களுக்கு ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஏற்றுமதிக்கேற்றவாறு முதன்மைப்படுத்துதல், சிப்பமிடல் போன்றவற்றை மேற்கொள்ள வழிமுறைகளையும், வங்கிக்கடன் பெற வழிகாட்டுதலும், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.

விவசாயிகள், சிறு வேளாண் வணிகர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top