Close
ஜனவரி 7, 2025 6:13 காலை

தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் விபரங்களோடு வெளியாகி பரவலான கண்டனத்திற்கு உள்ளானது.

இந்த விஷயத்தில் குற்றமிழைத்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் கடுமையாக எதிர்வினையாற்றியன.

இப்போது மட்டும் எப்ஐஆர் கசிந்தது எப்படி? இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு மத்திய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த மு மையின் விளக்கம் மூலம் தெரிய வந்துள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறானால், புதிய குற்ற வியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விபரங்கள் இப்படி கசிய வில்லையே? இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது? என்ற கேள்வி எழுகிறது.

சதி உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்!

எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான ஒன்றிய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டுமென்றும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விபரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டுமெனவும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென்று சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top