Close
ஜனவரி 7, 2025 7:33 மணி

மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்..

போட்டி துவங்கும் இடம் நகரிலிருந்து தூரம் என்பதால் குறைந்த அளவிலேயே பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி தமிழக முழுவதும் நடைபெறுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்பில், அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி வையாவூர் பகுதியில் துவங்கியது.

13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இருபது கிலோ மீட்டர், மாணவிகளுக்கு 15 கிலோமீட்டரும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவியர்களுக்கு 17 கிலோ மீட்டர் என போட்டி எல்லை வரையறுக்கபட்டது.

வையாவூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி கரூர் வரை நடைபெறும் இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தனர்.

13 வயதுக்குட்பட்ட போட்டியில் அந்திரசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கிஷோர் முதலிடத்தையும், சஞ்சய் இரண்டாவது இடத்தையும், மாமல்லன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் முகுந்தன் மூன்றாம் இடம் பிடித்தார்.

இதேபோல் பெண்கள் பிரிவில் மாமல்லன் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த சௌந்தர்யா முதலிடத்தையும், குருஷேத்ரா பள்ளி மாணவி சாருமதி இரண்டாம் இடத்தையும், மரியா ஆக்சிலின் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சரஸ்வதி மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

போட்டியில் முதலிடம் பெற்ற நபருக்கு ரூபாய் ஐந்தாயிரமும், இரண்டாவது பரிசாக 3000 , மூன்றாவது பரிசாக 2000 , 4 முதல் 10 ஆம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 250 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி, பயிற்சியாளர்கள், விளையாட்டு நல அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.

கடந்தாண்டு பழைய ரயில்வே நிலையம் அருகில் இருந்து போட்டி துவங்கிய நிலையில் , தற்போது அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் தள்ளி போட்டி துவங்கும் என அறிவிக்கப்பட்டதால் பள்ளி மாணவ மாணவி பங்கேற்பு வெகுவாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top