Close
ஜனவரி 8, 2025 3:22 காலை

இந்தியாவில் கோழிப்பண்ணை துவங்க லைசென்ஸ் முறை வேண்டும்: என்இசிசி கூட்டத்தில் கோரிக்கை..!

நாமக்கல்லில் நடைபெற்ற கோழிப்பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், என்இசிசி மண்டலத்தலைவர் சிங்கராஜ் பேசினார்.

நாமக்கல் :

இந்தியாவில் தேவையை விட அதிகமான முட்டை உற்பத்தியாவதால், முட்டைக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருகிறது, எனவே கோழிப்பண்ணை துவங்க லைசென்சிங் முறையை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என, என்இசிசி மண்டலத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) சார்பில், கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் பொது மேலாளர் மக்தூம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தநரராஜன், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன், முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் மற்றும் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாள்தோறும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு ஏற்றுமதிக்கும் சுமார் 1 கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு சுமார் 4.5 கோடி முட்டை அனுப்பி வைக்கப்படுகின்றன.

என்இசிசி சார்பில் நாள்தோறும் முட்டை விலை அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 6.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நிலையில், 5.5 கோடி முட்டைகள் மட்டுமே விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நாள்தோறும் சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கமடையும் நிலை ஏற்படுகிறது.

இதை பயன்படுத்தி, முட்டை வியாபாரிகள் என்இசிசி அறிவிக்கும் முட்டை விலையை பண்ணையாளர்களுக்கு வழங்காமல் ஒரு முட்டைக்கு சுமார் 50 பைசாவரை விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

கோழித்தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மக்காச்சோளம், புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், ஒரு முட்டையின் உற்பத்தி செலவும் ரூ. 5.30 ஆகிறது. ஆனால் ஒரு முட்டை ரூ. 4.75 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முட்டை உற்பத்தி தேவையை விட அதிகரித்து வருகிறது. அங்கு கோழிப்பண்ணைகள் அமைக்க அந்த மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் முட்டைக்கு கட்டுபாடியான விலை கிடைக்காமல், பெரும் நஷ்டும் ஏற்பட்டு நலிவடைந்து வருகிறது. எனவே மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கோழிப்பண்ணைகளின் எண்ணிக்கை, முட்டை உற்பத்தி மற்றும் முட்டை நுகர்வு ஆகியவற்றை கணக்கிட்டு, தேவையான அளவு மட்டுமே கோழிப்பண்ணைகள் அமைக்க லைசென்சிங் முறையை கொண்டுவர வேண்டும்.

மேலும் இதன்மூலம் கோழிப்பண்ணை தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றுவதுடன், அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பண்ணைகள் அமைக்கப்படும் என அவர் கூறினார். திரளான என்இசிசி நிர்வாகிகள் மற்றும் பண்ணையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top