Close
ஜனவரி 8, 2025 3:13 காலை

வாகனம் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை தாக்கிய வழக்கறிஞர் பிணையில் விடுதலை… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..

காஞ்சிபுரம் மாநகரம் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அருகே நேற்று இரவு 10:45 மணிக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பெரிய நத்தம் கிராமம், எல்லையம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற காவலர் இரவு ரோந்து பணியில் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள பாண்டியன் ஹோட்டல் அருகே மகேந்திரா பொலிரோ கார் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்தால் போக்குவரத்து இடஞ்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பணியில் இருந்த காவலர் ஏழுமலை அந்த வாகனத்தில் வந்த நபரை வாகனத்தை எடுக்க கூறியுள்ளார்.

அந்த வாகனத்தில் இருந்த காஞ்சிபுரம் ரயில்வே ரோடு , கந்தன் பார்க் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் மதுபோதையில் காவலருடன் வாய் தகராறு ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் காவலரை திட்டி கைகளால் வாய்ப்பகுதியில் தாக்கியதால் காவலருக்கு உதடுகள் மற்றும் பற்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து ஏழுமலை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று உதட்டில் தையல் போடப்பட்டு நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் காவலரை தாக்கிய வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ராஜேஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து இன்று காலையில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி வாசுதேவன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

வழக்கறிஞர் ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்து காஞ்சிபுரம் அனைத்து வழக்கறிஞர்களின் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ராஜேஷை காவலர் தாக்கியதால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சார்பில் வாதாடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி வாசுதேவன், சிவகாஞ்சி காவல்துறையினருக்கு அவரது மனுவை பெற்றுக்கொண்டு காவலர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் எனக் கூறியதால் காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் நீதிபதி இரு தரப்பினரிடம் கூறுகையில், வழக்கறிஞர்களும் காவல்துறையும் இணைந்து பொதுமக்களுக்கான செயல்பட வேண்டும். அது பொது மக்களுக்கு மிகுந்த பயன் தரும் என்பதால் இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம். இது தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் நிலையில் இருதரப்பினரும் இருக்கும் அவப்பெயர் உண்டாக்கும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜேஷ் நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டதால் இச்சம்பவம் பரபரப்பு குறைந்து, காவலர்கள் மத்தியில் சிறு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது..

இந்த சம்பவம் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top