மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்தி வருபவரும் , முன்னாள் ராணுவ வீரருமான 50 வயதுமிக்க கார்த்திக் என்பவர், கடந்த 49 வருடமாக ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த நான்கு வருட காலமாக தான் தொழில் நடத்தும் வாடகை கட்டிடத்தில், ரஜினிக்கு கோவில் அமைத்து அவர் நடித்த படங்களின் உருவங்களை வடிவமைத்து நாள் தோறும் பூஜிப்பதுடன், ரஜினிக்கு கருங்கலின்னால் ஆன 250 கிலோ எடை கொண்ட முழு உருவத்தில் சிலை அமைத்து, அதற்கு நாள்தோறும் பால், பன்னீர் ,இளநீர், சந்தனம் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகிறார்.
அதனை தொடர்ந்து , உற்சவராக 300 கிலோ எடை கொண்ட கருங்கல்லிலான அவரது முழு உருவ சிலைக்கு தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் 74 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் , அவருக்கு சிறப்பு யாக பூஜைகள் நடத்தி, தனது குடும்பத்தோடு வழிபட்டு வந்தார்.
மேலும் , அவரையே குல தெய்வமாக இன்றுவரை பூஜித்துவரும் நிலையில், இதனை தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் கண்ட ரஜினி, கார்த்திக்கை சில நாட்களுக்கு முன்பு, அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து கௌரவித்தார்.
இது குறித்து கார்த்திக் கூறுகையில், ரஜினி தனது இல்லத்தை முழுவதும் சுற்றி காண்பித்ததுடன், தந்து குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.