திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் தொகுப்பில் ரூபாய் 2500 கொடுத்த போது எதிர்க்கட்சி ஆக இருந்த திமுக மக்களுக்கு இந்த பணம் போதாது ரூபாய் 5000 தரவேண்டும் என்று வாய் கூசாமல் பேசினர். இன்றைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் 500 கூட தர இயலாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த ஒரு வசதிகளும் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செம்மரக்கட்டைகளை வெட்டி நம் தமிழ் மக்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள்? இதற்கு காரணம் ஆந்திரா எல்லையில் உள்ள வேலூர் திருவண்ணாமலை பகுதிகளில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஆந்திர மாநிலத்திற்கு சென்று செம்மரக்கட்டை வெட்டும் நிலைமை இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தான்.
செம்மர கட்டையை வைத்து இன்றைக்கு படம் எடுத்து உள்ளார்கள். பாகம் 1 பாகம் 2 என்று படம் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் உண்மையான புஷ்பா நம்ம கேப்டன் விஜயகாந்த்.
திமுக ஆட்சியில் பாலம் கட்டி மூன்று மாதத்தில் இடிந்தது வேதனையாக உள்ளது திமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் இருப்பதால்தான் பாலம் இப்படி ஆனது, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய பாலம் மணலூர்பேட்டையில் கம்பீரமாக நிற்கிறது
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில் தமிழக அரசு அப்பகுதியில் நிரந்தர தீர்வு காண வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக யாராவது கேள்வி கேட்டாலோ ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினாலோ உடனடியாக கைது செய்கிறார்கள். மினி எமர்ஜென்சி அடக்குமுறை சட்டம் நடக்கிறதா?
ஆளும் கட்சிக்கு கூட்டணி இருக்கிறவர்கள் ஜால்ரா அடிக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார் . அங்கு அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,
நாங்கள் இருக்கும் கூட்டணி தொடர்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. 2026ல் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமையும். அதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியை வலுபடுத்துவதற்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன், என்றார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை தீபமலையில் மலைச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், தண்டராம்பட்டு அருகே பெஞ்சல் புயல் வெள்ளத்தால் உடைந்து சேதமடைந்த தென்பெண்ணை ஆற்றுப்பாலத்தையும் பார்வையிட்டார். அப்போது, மாவட்ட தலைவர் நேரு, மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.