Close
ஜனவரி 10, 2025 1:52 காலை

கூகுள் பே மூலம் டீச்சர் வேலைக்கு லஞ்சம் : துணை ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்..!

கோப்பு படம்

டீச்சர் வேலைக்கு ரூபாய் 1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை துணை ஆய்வாளர் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை பள்ளி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் . உடற்கல்வி ஆசிரியராக இருந்து துணை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள ஏ எல் சி அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பதவிக்கு கவிதா என்பவர் தேர்வானார் . ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று நியமன உத்தரவு பெற்று இருக்கிறார். அதன் பிறகு கவிதாவின் நியமனத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசால் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது ஆசிரியர் பணியிடங்களை அந்தப் பள்ளி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம் இந்த நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் நடந்துள்ளது என்பதை பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்து அனுமதி வழங்கும்.

இந்நிலையில் கவிதாவின் நியமனத்திற்கு அனுமதி வழங்க பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார் கவிதாவிடம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.  லஞ்ச பணமாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்படி ஒன்றரை லட்சம் ரூபாயை பள்ளி துணை ஆய்வாளர் (Deputy Inspector of Schools)  செந்தில்குமார் கூகுள் பே மூலமாக கவிதாவிடம் இருந்து பெற்றுள்ளார். அந்த தொகை செந்தில்குமாரின் மனைவி புஷ்பவள்ளியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியை கவிதா திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார் கூகுள் பே மூலமாக கவிதாவிடம் இருந்து பணம் பெற்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியையின் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், செந்தில்குமாரின் இடைநீக்கம் காலத்தில் அடிப்படை விதி 53(i) இன் கீழ் அவருக்கு வாழ்வாதார உதவி மற்றும் இதர படிகள் வழங்கப்படும் எனவும் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியை நியமனத்திற்கு பள்ளி துணை ஆய்வாளர் லஞ்சம் பெற்ற சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஸ்பெண்ட் உத்தரவு, பள்ளி கல்வி துறை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top