Close
ஜனவரி 9, 2025 6:06 மணி

பாஜக கூட்டணியில் இணையும் சரத் பவார்! அமைச்சராகிறாரா சுப்ரியா சுலே?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணியுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்ட சரத் பவார் அணி, 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

முன்னதாகவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும் சின்னமும் அஜித் பவார் அணிக்கே சொந்தம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சில எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மாறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில், சரத் பவார் அணியில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பவார் அணியில் விரைவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக கூட்டணியின் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 300-ஐ கடக்கும்.

மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைய சரத் பவார் தயாராக இருப்பதாகவும், அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மோடி அமைச்சரவையில் பதவி பெற முயற்சித்து வருவதாகவும் கட்சிக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top