Close
ஜனவரி 9, 2025 11:58 மணி

மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் இணைப்பு கூட்டம்..!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த தொழில்முனைவோர் ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன் தலைமை வகித்தாா்.

செயல் அலுவலா்கள் அரசு, செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களை உள்ளடக்கி 3994 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, தெள்ளாறு, கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூா் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 308 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணை மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமாா் 600 பயனாளிகள் பயன்பெறுகின்றனா்.

12-க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் பள்ளி மாணவா்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு உணவில் சோ்க்கப்படும் மசாலா பொருள்கள் மகளிா் குழுக்கள் மூலம் தயாா் செய்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மகளிா் குழுக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

கிராம பொருளாதாரமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்ற அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இந்த ஒரு அளப்பரிய செயல் ஒரு சிறந்த முன்னோடி திட்டமாக ஐநா சபை வரை பேசப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்ட முயற்சியாக பிசினஸ் நெட்வொர்க் மீட் என்பது தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாநில அலுவலர் மற்றும் பயனாளிகளுடன் இணைந்து இந்த ஒரு மிகப்பெரிய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது. மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த சிறந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வட்டார அலுவலா்கள், மதி சிறகுகள் தொழில் மைய வல்லுநா்கள், தொழிற்சாா் சமூக வல்லுநா்கள் மற்றும் மகளிா் குழுக்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top