Close
ஜனவரி 11, 2025 12:02 மணி

திருவண்ணாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியர் வழங்கினார்

திருவண்ணாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை, புது காா்கானா தெருவில் இயங்கி வரும் கற்பகம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,707 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பு ஜனவரி 13-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்டவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட வழங்கல் அலுவலா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top