Close
ஜனவரி 11, 2025 10:49 காலை

ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..

பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் சொந்தமான ஒலிமுகமது பேட்டை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் யாத்ரி நிவாஸ் எனும் விடுதி கட்டப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்கள் தங்குமிடம் மற்றும் அவர்களின் வாகன வசதிக்காக மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டது.

மேலும் இதன் மூலம் காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்பதால் காவல்துறை முதல் அனைத்து தரப்பினரும் இதனை வரவேற்றனர்.

தற்போது இரண்டு மாதங்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்கள் காஞ்சிபுரம் வழியாக செல்லும் நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்களை தரிசிப்பது வழக்கம்.

இதனால் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களால் அப்பகுதி சாலையோர வியாபாரிகள் சுமார் 200 பேர் தங்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொண்டு இருந்த நிலையில் தற்போது அந்த யாத்திரி நிவாஸ் பகுதியில் மட்டுமே வாகனம் நிறுத்தும் வேண்டுமென கட்டாயப்படுத்தும் செயலால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோவதாக தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக இங்கு வாகன நிறுத்தும் இட வசதிக்காக காஞ்சிபுரம் மாநகராட்சி டெண்டர் விடப்பட்டு செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது இங்கு நிறுத்தக்கூடாது என்பதால் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளதால் காவல்துறை இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்து அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கூறி 50க்கும் மேற்பட்ட சாலை ஓர வியாபாரிகள் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் வியாபாரம் செய்து வருவதால் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top