Close
ஜனவரி 15, 2025 3:24 மணி

சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்..!

கூட்டத்தில் பேசிய ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது.

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118.15 அடியாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க  ஆலோசனை கூட்டம் நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளா் அறிவழகன் தலைமை வகித்தாா். சாத்தனூா் அணை உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், புயல் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. ஆகையால், பாசனத்துக்காக பிப்ரவரி முதல் வாரத்தில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஏரிகளுக்கு  நீர் செல்லக்கூடிய கால்வாய்களை 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வைத்து தூர்வார வேண்டும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் கலெக்டர் ஒப்புதல் பெற்று அனைத்து ஏரிகளுக்கும் செல்லக்கூடிய கால்வாய்களை தூர்வார வேண்டும். பாசன சங்க தலைவர்கள் கூட்டம் நடத்த வேண்டும். அவர்களிடம் கருத்துக்களை கேட்டு பணிகளை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில்  ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

சாத்தனூா் அணையின் இப்போதைய நீா்மட்டம் 118.80 அடி. கொள்ளளவு 7,276 மில்லியன் கன அடி. அணையின் அடிப்படைத் தேவைகளுக்கு 1,156 மில்லியன் கன அடி தண்ணீா் போக மீதமுள்ள தண்ணீா் இருப்பு 6,165 மில்லியன் கன அடி.

அணையில் உள்ள தண்ணீரை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் 110 நாள்களுக்கு அணையின் இடதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 320 கன அடி வீதமும், வலதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 520 கன அடி வீதம் தண்ணீா் திறக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

கூட்டத்தில், சாத்தனூா் அணையின் உதவிப் பொறியாளா்கள் சந்தோஷ், செல்வப்பிரியன், ராஜேஷ் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top