Close
ஜனவரி 15, 2025 5:13 காலை

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை: ஆசிரியர்கள் கண்டனம்..!

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு.

நாமக்கல் :

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த, தமிழக அரசு முயற்சி செய்வதற்கு, ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர், நாமக்கல் ராமு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு சட்டசபையில் காஞ்சிபுரம் எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அதில், மத்திய அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் இரண்டிற்கும் மாற்றாக புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறார்கள்.

அந்த ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒரு புதிய குழுவினை முதல்வர் அறிவிப்பார், அதன் வழிகாட்டுதலின்படி, அந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய முதல்வர், கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அதனை அறிவித்தார்கள்.

அதனை நம்பி தமிழ்நாடு அரசில் பணிபுரியும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக ஆட்சிக்கு வர தங்களது வாக்குகளையும் தங்கள் குடும்ப வாக்குகளையும் அளித்தனர். சென்னை தீவுத்திடலில் ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெற்ற வாழ்வாதார மாநாட்டிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என்று முதல்வர் வெளிப்படையாகவே பேசி இருந்தார்.

இந்த நிலையில் சட்டசபையில், பேசிய அமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவதைப் பற்றி எதையும் தெரிவிக்காமல், மத்திய அரசு கொண்டு வர உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

தற்போதைய ஆட்சியில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் 99 சதவீதம் இன்னும் நிறைவேற்றாமல் கொடுத்த வாக்குறுதியை ஏமாற்ற அரசு நினைக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையாக உள்ள. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top