நாமக்கல் :
நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில், கயிறு அறுந்ததால் மேயர், துணை மேயர் ஆகியோர் தலைகுப்புற விழுந்தனர்.
நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் பொங்கல் விழா நடைபெற்றது. மேயர் துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் ஆகியோர் வேட்டி, சேலை பாரம்பரிய புத்தாடை அணிந்து விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது.
கயிற்றின் ஒரு பகுதியில் மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி மற்றும் கவுன்சிலர்களும், மறு பகுதியில் அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பங்கேற்றனர். போட்டி தொடங்கியதும் இருதரப்பினரும் தங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி கயிற்றை இழுக்கத் தொடங்கினர்.
சில வினாடிகளில் மேயர் கலாநிதி பக்கம் இருந்த கயிறு இரண்டாக அறுந்தது. இதில் நிலை குலைந்த மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்பட கவுன்சிலர்கள் அனைவரும் தலைகுப்புற தரையில் விழுந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் அனைவரும் எழுந்தனர். இச்சம்பவம் விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.