திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் 8ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், ஊடல் திருவிழா உள்பட பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இதில் உத்தராயண புண்ணிய கால பூஜை முன்னிட்டு 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.
தை மாதம் தேவர்களின் பகல் காலம் என்று அறியப்படும் உத்தராயண புண்ணிய கால தொடங்க இருக்கிறது, இந்த உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவது மற்றும் சூரியன் தெற்கு திசையில் இருந்து வடதிசை நோக்கி செல்வது ஆகிய இரண்டுமே உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது, சாஸ்திரங்களின்படி உத்திராயன புண்ணிய காலம் என்பது தேவர்களுடைய பகல் காலம் தை மாதம் ஒன்றாம் தேதி துவங்கும் உத்தராயண புண்ணிய காலம் ஆனி மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் இந்த திருவிழா மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் நடைபெறும்.
அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவும் கொடி ஏற்றத்துடன் துவங்கும். அந்த வகையில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்று கடந்த 5 ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தராயணபுண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு மார்கழி மாத இறுதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.
உத்தராயண புண்ணியகால 8ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு விநாயகர், மாணிக்கவாசகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருவி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான வருகிற 14ம்தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.