Close
ஜனவரி 14, 2025 10:29 மணி

பரமத்தி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு..!

கோப்பு படம்

நாமக்கல்:

பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இது குறித்து பரமத்தி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பரமத்தி மற்றும் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்துக்களின் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கான நிலையம் அமைக்க, பமத்தி அருகே உள்ள மாணிக்கநத்தம் மற்றும் இருக்கூர் பஞ்சாயத்து எல்லையில் பஞ்சப்பாளையம் பிரிவு ரோடு அருகில் இடம் தேர்வு செய்யப்படது. இதை அறிந்த மாணிக்கநத்தம், இருக்கூர், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துக்களை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, பரமத்தி பைபாஸ் ரோடு கோர்ட் அருகில், புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால், பரமத்தி, பரமத்தி நகரை சுற்றி உள்ள வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர், மாவுரெட்டி, கரட்டுப்பாளையம், குப்புச்சிப்பாளையம், ஓவியம்பாளையம், சானிப்பட்டி, தேவிபாளையம், கீழக்கடை, கோட்டணம்பாளையம், ஊஞ்சப்பாளையம், காமாட்சி நகர், கட்டமராபாளையம், பொன்னேரிப்பட்டி, காளிபாளையம், பிலிக்கல்பாளையம், கீழ்சாத்தம்பூர், சின்ன கரசப்பாளையம், பெரிய கரசப்பாளையம், வாழவந்தி, ஓலப்பாளையம், எல்லைமேடு, கூடுதுறை, மரவபாளையம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில், நிலத்தடி நீர் மாசடைந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பரமத்தி டவுன் பஞ்சாயத்து மக்களின் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி, இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். மக்களின் விருப்பத்தை கேட்டு செயல்படாத இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பொதுமக்களின் நலனை பாதுகாத்திட, பரமத்தி கோர்ட் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top