Close
ஜனவரி 15, 2025 8:48 காலை

காரில் எடுத்துச்சென்ற கணக்கில் வராத ரூ. 12.50 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

கோப்பு படம்

நாமக்கல் :

கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து சென்ற நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் வள்ளல் (54). நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கல் மற்றும் மண் குவாரிகள் உள்ளன.

அதன் உரிமையாளர்களிடம் இருந்து, உதவி இயக்குனர் வள்ளல், வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை மாமூலாக வசூல் செய்வதாகவும், தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதிக அளவில் வசூல் செய்துள்ள பணத்தை எடுத்துக் கொண்டு, தனது சொந்த ஊரான கோவைக்கு காரில் செல்வதாகவும், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், நேற்று இரவு 7 மணிக்கு, நாமக்கல் – திருச்செங்கோடு ரோட்டில், நல்லிபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக, நாமக்கல்லில் இருந்து கோவைக்கு சென்ற நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலின் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் ஒரு பையில் ரூ. 12.50 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, அவரிடம் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதையடுத்து, அவர் வைத்திருந்த கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top