காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பலத்த தீ காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் இருவர் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெமிலி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் எல்லைக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் இவர் தனியார் நிறுவனத்தின் டாடா ஏஸ் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் விஜய கணபதியும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வடிவிலான பொருட்களை வீசி உள்ளனர்.
இதில் தீக்காயங்களுடன் அலறிய இருவரும் அருகில் இருந்த நீர் மற்றும் மணல் ஆகியவற்றில் விழுந்து தப்பித்துள்ளனர்.
அதற்குள் தமிழரசனுக்கு 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களும் விஜய கணபதிக்கு 30 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உடனடியாக மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
ஏற்கனவே தமிழரசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்து நெமிலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீக்காயம் அடைந்த தமிழரசன் தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும், விஜய கணபதிக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும், தற்போது அவர் மனைவி இரண்டாவதாக நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.