Close
ஜனவரி 22, 2025 7:03 மணி

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

அண்ணாமலையார்

திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோவிலில் மறுவூடல் விழா நடைபெற்றது
கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில் 2 முறை பக்தர்களை போலவே அண்ணாமலையாரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

திருவூடல் திருவிழா

ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் தை மாதம் 2-ம் நாள் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் உள்ள திருவூடல் வீதியில் நடைபெற்ற விழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்று விட்டார். அதன்பின்னர் சாமி குமரக்கோவிலுக்கு சென்றார்.

தொடர்ந்து அங்கிருந்து நேற்று அதிகாலை அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் கிரிவலம் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ஸ்ரீ ரமணாஸ்ரமம், திரு நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலையார் திருக்கோயில், துர்க்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்தனர்.

தொடர்ந்து சாமி கிரிவலம் சென்று கோவிலை வந்தடைந்தார். பின்னர் கோவிலில் மறுவூடல் விழா நடந்தது.

மறுவூடல் விழா

அப்போது அண்ணாமலையார் மேளதாளங்கள் முழங்க வெளியில் இருந்து உள்ளே வந்து சன்னதியில் எழுந்தருளினார்.

நேற்று முன்தினம் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு வந்த அம்மன், சாமி சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தியின் சன்னதியில் கதவை மூடி உள்ளே இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அண்ணாமலையார்  உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் இணைவது போன்று மறுவூடல் விழா நடைபெற்றது.

முன்னதாக கோவில் ஓதுவார் சாமியின் முன்பு திருவூடல் மற்றும் மறுவூடல் விழாவின் கதையை பாடி காண்பித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசினம் செய்தனர்.

அண்ணாமலையார் கிரிவலம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top