தை முதல் வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
“புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க வல்லது திருவிளக்கு வழிபாடு” , அதனால் தான் தினதோறும் வீடுகளில் காலை மாலை இரு வேலையும் தீபமேற்றி வழிபடுவது நம் சம்பிரதாயம்.
தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திரு கோவில்களில் 1008 ,108 என்ற எண்ணிக்கையில் திருவிளக்கு பூஜைகள் செய்து கூட்டு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.
“விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும்” என்று திருமந்திரம் போற்றுகிறது. ஆலயங்களில் பலர் கூடி செய்யும் திருவிளக்கு வழிபாடு மந்திர பூர்வமாக செய்யும் வேள்வி செய்வதற்கு சமம்.
தீபத்தில் எழுந்தருளுகின்ற சுடரை தீப லட்சுமி என்றே வழிபடுவது நமது வழக்கம்.
அதன்படி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தை மாத முதல் வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், மானசாதேவி, துர்க்கை அம்மன், உமாதேவி சன்னதிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், அபிஷேக திரவியங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சன்னதிக்கு எதிரே உள்ள மகா மண்டபத்தில் 108 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 108 பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஆசிரமம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ஜெயந்தி விழா
வருகின்ற ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகான் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் மகான் சேஷாத்திரி சுவாமிகளின் 155 வது ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.