திருக்கோவிலூர் ஆசனூர் சாலை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் மலையரசன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது;
தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் சாலைகள் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் இன்றைய தினம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறையின் சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த வகையில் திருக்கோவிலூர் ஆசனூர் சாலை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்த பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது . இச்சாலையில் 58 சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் பிரிவு சாலை சந்திப்பை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட உள்ளது. சாலை மற்றும் பால பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் அகற்றப்பட்டு அகற்றப்படும் மரங்களுக்கு ஈடு கட்டும் வகையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் 6,500 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
இந்த சாலை அகலப்படுத்துவதால் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இணைப்பு சாலையாகவும் வேலூர் பெங்களூர் திருப்பதி முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் உள்ள ஆன்மீகத் திருத்தலங்களுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் எளிதில் சென்றடைய இந்த சாலை மிகப் பயனுள்ளதாக அமைய உள்ளது என அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகரன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.