Close
ஜனவரி 22, 2025 3:48 மணி

சென்னையில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு திறன் பயிற்சி : அமைச்சர் வழியனுப்பி வைத்தார்..!

சென்னையில் நடைபெறும் திறன் பயிற்சிக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் மாணவ மாணவிகள் செல்லும் பஸ்சை, அமைச்சர் மதிவேந்தன் வழியனுப்பி வைத்தார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல் :

ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு சென்னையில் திறன் பயிற்சிக்காக, அமைச்சர் வழியனுப்பி வைத்தார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழிகாட்டி பயிற்சிக்கு மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்கள், சென்னையில் நடக்கும் பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழிகாட்டி பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பயிற்சியாளர்கள் சென்னை செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழிகாட்டி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் அவர் உரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேலும், இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட, பல்வேறு தொழில் கடனுதவிகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இளைஞர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பழங்குடியினர் மாணவ, மாணவியரின் திறனை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழிகாட்டி பயிற்சி சென்னையில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில், 24 வகையான திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை முழுமையாக பயன்படுத்தினால், 100 சதவீதம் வேலைவாய்ப்புகளை பெறமுடியும். அரசின் அனைத்து திட்டங்களையும் இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு, தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top