நாமக்கல் :
சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலகாவில் உள்ள, சேந்தமங்கலம் மற்றும் எருமப்பட்டி வட்டாரங்களில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் சம்பா தாளடி நெல், சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைவான விலையில் நெல் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில், இப்பகுதியில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.